கோவை: கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகையை யொட்டி, மகாபலி மன்னன் வேடமிட்டவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கியதால் மாணவர்களிடையே உற்சாகம் அடைந்தனர்.
மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. பண்டைய காலத்தில் கேரளத்தை ஆண்ட மகாபலி மன்னன், ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களின் மகிழ்ச்சியை காண்பதற்காக இந்நாளில் மீண்டும் வருவதாக மலையாள மொழி பேசும் மக்கள் நம்புகின்றனர்.
கேரளா மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் இவ்விழாவை 9 நாட்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். பூக்கோலமிட்டும், சந்தியா எனப்படும் அறுசுவை உணவு சமைத்தும், பல வகை பாயாசங்கள் வைத்தும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வாழும் கேரள மக்களால் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகை கடந்த சில நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 3 நாட்களாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மாணவர்கள் பூக்கோலங்கள் இட்டும், அறுசுவை உணவுகள் தயாரித்தும் விழாவை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் ஓணம் பண்டிகையின் முக்கிய நிகழ்வான மகாபலி மன்னன் வருகை இன்று நடைபெறுகிறது. வழக்கமாக மகாபலி மன்னன் வேடமணிந்த ஒருவர் நிகழ்வின் நாயகராக வலம் வருவது வழக்கம். ஆனால் கல்லூரி சார்பில் சிறப்பு ஏற்பாடாக, மன்னன் மகாபலி ஹெலிகாப்டரில் வந்திறங்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைக்கண்டு மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.