கொடைக்கானல்: தொடர் மழை காரணமாக கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு இன்று ஒரு நாள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான பேரிஜம் ஏரி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. எனவே, வனத்துறையிடம் அனுமதி பெற்ற பின்னரே சுற்றுலா பயணிகள் செல்ல முடியும்.
பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கி பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாயின்ட், அமைதிப் பள்ளத்தாக்கு போன்ற இடங்களைக் காணலாம். இந்நிலையில் தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அதே நேரத்தில், மோயர் சதுக்கம், பைன் வனம், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.