திருவள்ளூர்: சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், ஜூலை முதல் அக்டோபர் வரை, 8 டி.எம்.சி., ஜனவரி முதல் ஏப்ரல் வரை, 4 டி.எம்.சி., என, 12 டி.எம்.சி., கிருஷ்ணா நதி நீரை, தமிழகத்துக்கு, ஆந்திர அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டும். அந்த வகையில், சென்னையின் குடிநீருக்காக ஜனவரி முதல் ஏப்ரல் வரை வழங்க வேண்டிய கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும் என ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு சமீபத்தில் கடிதம் எழுதினர்.

இதையடுத்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் மூலம் சென்னை குடிநீருக்காக ஆந்திர மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த 24-ம் தேதி மதியம் 12 மணிக்கு கிருஷ்ணா நீரை திறந்துவிட்டனர். முதலில் வினாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்ட கிருஷ்ணா நீரின் அளவு நேற்று காலை 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், 152 கி.மீ., தூரம் பயணித்து, தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே, இன்று காலை, 10 மணியளவில் வந்தது. அப்போது வினாடிக்கு 52 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீரை தமிழக நீர்வளத்துறை சார்பில் மலர் தூவி வரவேற்றனர். தமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நீர், 25 கி.மீ., தூரம் பயணித்து இன்று இரவு பூண்டி ஏரியை வந்தடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.