பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்றுப் பிழை என கூறிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கருத்துக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் தியாகப்பாடுகள் மற்றும் வளர்ச்சியை ஒட்டியபடி, ஜெயலலிதா எடுத்த அனைத்து முடிவுகளும் நியாயமானவை என்றும், அதனை விமர்சிப்பது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா தலைமையில் அதிமுக பல முறை ஆட்சி அமைத்து, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்ந்த பெருமையை பெற்றுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, அதிமுக மீண்டும் ஆட்சி அமைந்தது வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இத்தகைய வரலாற்று செயலை, ஒரு பிழையாக விமர்சிப்பது அதிமுகவின் அடிப்படைக் கொள்கைகளை உணராததைக் காட்டுகிறது.

1999ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜகவுடன் உள்ள கூட்டணியை ஜெயலலிதா முடித்து வைத்ததால்தான், 2001ஆம் ஆண்டு அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதுவே வரலாற்று புரட்சி எனலாம். ஆனால், அந்த முடிவை விமர்சித்த கடம்பூர் ராஜூ, ஜெயலலிதாவால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உயர்ந்தவர் என்பதையும் OPS குறிப்பிடுகிறார். இதை “வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது” என்ற பழமொழிக்கு ஒப்பிடுகிறார்.
ஜெயலலிதாவை விமர்சிப்பது என்பது “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது போல” என்றும், ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் செயல் எனவும் OPS கூறியுள்ளார். கடம்பூர் ராஜூ இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் மக்கள் தக்க பதிலை அளிப்பார்கள் என்றும் OPS சுட்டிக்காட்டினார்.