சென்னை: லண்டன் மற்றும் சிங்கப்பூர் செல்லும் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் 500 பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்து 5.30 மணிக்கு லண்டனுக்கு சென்னையில் இருந்து புறப்படுகிறது. இன்று (அக்.2) இந்த விமானத்தில் சென்னையில் இருந்து லண்டன் செல்ல 317 பயணிகள் அதிகாலை 2.30 மணிக்கு முன்னதாகவே விமான நிலையம் வந்து அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் முடித்துக் கொண்டு காத்திருந்தனர்.
இந்நிலையில் லண்டனில் இருந்து சுமார் 300 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானம் தாமதமாகி, 317 பயணிகளும் ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.
லண்டன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து, விமானம் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தடைந்தது. பின்னர், விமானம் விடுவிக்கப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த 317 பயணிகளும் ஏற்றப்பட்டனர்.
சென்னையில் இருந்து லண்டனுக்கு 5 மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு விமானம் புறப்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமாக சென்னை வந்தது.
இதன் காரணமாக இன்று அதிகாலை 1.40 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானம் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டது. ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்த 188 பயணிகளும் அந்த விமானத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
லண்டன் மற்றும் சிங்கப்பூர் செல்லும் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.