சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் புதிய தாழ்தள பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பயணிக்க வசதியாக வடிவமைக்கப்பட்ட இந்த பேருந்துகளில் காற்றோட்ட வசதி குறைவாக இருப்பதாக பயணிகள் குறை கூறுகிறார்கள். மதிய நேரங்களில் மற்றும் பீக் நேரங்களில் பயணிக்கும் போது பயணிகள் கடுமையான சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த புதிய பேருந்துகளில் 35 பயணிகள் அமர்வதற்கான வசதி உள்ளது, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விசாலமான இடம் கொண்ட இருக்கைகள் உள்ளன. ஆனால், பின்பக்க பகுதிகளில் காற்றோட்டம் மிகக் குறைவாக உள்ளது, குறிப்பாக கடைசி இரு வரிசைகளில் பயணிகள் கடுமையான புழுக்கத்தை எதிர்கொள்கிறார்கள். அத்துடன், நின்று செல்லும் பயணிகள் கூட சிரமத்தை அனுபவிக்க வேண்டியதாகவே இருக்கிறது.
ஆனால், 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கும் சென்னையில் இந்த பேருந்தில் பயணம் செய்வது பயணிகள் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் துறை வல்லுனர்கள். MTC தனது X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், “இது விசாரிக்கப்பட்டு பிரச்சனை தீர்க்கப்படும்” என்று கூறியுள்ளது. டெல்லியில் உள்ள பஸ்களில் வெப்பத்தை சமாளிக்க பஸ்சின் உள்ளே காற்று செல்ல ப்ளோவர்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இப்போது புறநகர் மின்சார ரயில்களிலும் இந்த வசதி உள்ளது. இந்த கீழ்தள பேருந்திலும் இதே போன்ற வசதியை கொண்டு வந்தால், பீக் ஹவர்ஸில் பஸ்சுக்குள் காற்றோட்டம் இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.