நாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. மேலும் வலுப்பெற்று டெல்டா கடற்கரையை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ வரை வீசக்கூடும் என்பதால் மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என நாகை மாவட்ட மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தில் நாகூர் பட்டினச்சேரி தொடங்கி கோடியக்கரை வரை உள்ள 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 3500 நாட்டு படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் அந்தந்த படகுத்துறையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடலுக்குச் சென்ற விசைப் படகுகள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் மற்றும் டீசல் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.