அரக்கோணம்: தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெருமுச்சு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் அன்பில் மகேஸ் பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு புத்தகங்களை படிக்க வைத்து அவர்களின் கற்றல் திறனை சோதித்தார்.
இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் தங்களுக்கு தெரிந்த திருக்குறள் பாடல்களை பாடி அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, பள்ளியில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பள்ளி வளாகம், கழிவறைகளின் தூய்மை குறித்தும் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார். பள்ளியை சிறப்பாக நடத்தி வரும் எலிசபெத் மற்றும் ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் பாராட்டினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அரசு பள்ளிகளில் பணிபுரிய அரசு தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும். தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை மட்டுமின்றி பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களின் தேவையும் அதிகரித்து வருவதாக மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் கல்விக் கொள்கைக்கு முரணான விதிகளை மத்திய அரசு பிறப்பித்து வருகிறது. அதன்படி மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும்.
3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும் என்கிறார்கள்.ஆனால் நமது முதல்வர் அரசின் கொள்கையை கைவிட்டு பெற வேண்டிய அவசியம் இல்லை. மாநில நிதியை வைத்தே பார்த்துக்கொள்ளலாம்என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்று தெரிவித்தார் .