தாம்பரம்: பராமரிப்பு பணி காரணமாக சென்னை பல்லாவரம் – தாம்பரம் வழியாக கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரயில்களும், கூடுவாஞ்சேரி – தாம்பரம் வழியாக பல்லாவரம் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த இரு வாரங்களாக விடுமுறை நாட்களில் மட்டும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஆக.5) முதல் முறையாக சென்னை பல்லாவரம் – தாம்பரம் வழியாக கூடுவாஞ்சேரி வரையிலும், கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் வழியாக பல்லாவரம் வரையிலும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டியுள்ளது. செங்கல்பட்டில் இருந்து பல்லாவரம் வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்துத் துறை அறிவித்திருந்த நிலையில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், சென்னையின் நுழைவு வாயிலான தாம்பரத்தில் இருந்து பிற பகுதிகளுக்குச் செல்ல ஏராளமான மக்கள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
இந்நிலையில், போதிய பஸ்கள் இல்லாததால், வரும் பஸ்களை தட்டிக்கொண்டு மக்கள் அதிகளவில் பயணித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 150க்கும் மேற்பட்ட போலீசார், 20க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் உள்பட 170க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.