தஞ்சாவூர்; தடை செய்யப்பட்ட அரியவகை கடல் அட்டைகளை வைத்திருந்தவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட, பேராவூரணி அருகே உள்ள மந்திரிப்பட்டினம் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினமான 112 கடல் அட்டைகளை பிடித்து பன்னீர் செல்வம் (50) என்பவர் வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில், வனவர் சிவசங்கர், வனக்காப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் பன்னீர்செல்வத்தை பிடித்து விசாரணைக்காக பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகம் அழைத்து சென்றனர்.
பின்னர் தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி உத்தரவின் படி, வன உயிரின குற்ற வழக்கு (எண் 7/2024) பதிவு செய்யப்பட்டு பேராவூரணி மாஜிஸ்திரேட் முன்பு (பாபநாசம் கூடுதல் பொறுப்பு) ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.