திருநெல்வேலி : மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற்றம் மற்றும் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் அமைத்த குழு இன்று (புதன்கிழமை) மாஞ்சோலைக்கு சென்று விசாரிக்கிறது.
மாஞ்சோலை தேயிலை தோட்ட ஒப்பந்த காலம் 2028-ம் ஆண்டு முடிவடைவதால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதற்கு முன் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதை ஏற்று மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த தலைமை புலனாய்வு அதிகாரி கொண்ட குழுவை அமைத்து அந்த குழு மாஞ்சோலை பகுதியை நேரில் பார்வையிட உத்தரவிட்டது.
மேலும் ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் தலைமை விசாரணை அதிகாரி அடங்கிய குழு இன்று நெல்லை வந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குழு இன்று மாஞ்சோலைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்தக் குழுவில் தேசிய மனித உரிமைகள் ஆணைய விசாரணைக் குழு அதிகாரிகள் ரவி சிங் (துணை காவல் கண்காணிப்பாளர்), யோகேந்திர குமார் திரிபாதி (ஆய்வாளர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் தற்போது நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தொழிலாளர் துறை தோட்டப்பிரிவு உதவி ஆணையர் விக்டோரியா மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.