சென்னை: வயநாடு வந்துள்ள தமிழக மருத்துவக் குழுவினர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்துள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடுகளுடன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு இரண்டு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: காய்ச்சல், நோய் போன்ற பேரிடர் பாதிப்புகளை சமாளிக்க, இரண்டு வாகனங்களில் மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சை உபகரணங்கள் போதிய அளவில் வயநாட்டுக்கு அனுப்பப்பட்டன. வயநாட்டில் அமைந்துள்ள கொத்தநாடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழக மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
200க்கும் மேற்பட்ட குழந்தைகள், 300க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, தேவையான மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டது.
அங்குள்ள நிலைமையை எங்கள் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கூடுதல் வசதிகள் தேவைப்பட்டால், கேரள எல்லையான தமிழக மாவட்டங்களில் இருந்து கூடுதல் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்படும். இவ்வாறு கூறினார்கள்.