மதுரை: மதுரை விமான நிலையம் அக்டோபர் 1-ம் தேதி முதல் 24 மணி நேர சேவையைத் தொடங்குவதையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள வணிகர் சங்கங்களின் பேரவையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் பேசியதாவது:- இந்தியாவிலேயே 32-வது பரபரப்பான விமான நிலையம் என்ற பெருமையை பெற்ற மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட தொடங்கியுள்ளதால், வரும் 3-ல் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என விமான நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மதுரை விமான நிலையம் பெரும் பலன்களை அடையும் என்று கூறப்படுகிறது. மதுரை மற்றும் தென் மாவட்டங்களின் 25 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது.
மதுரையின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு இந்த விமான நிறுவனம் பெரும் பங்களிப்பாக இருக்கும். மதுரை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு உரிய ஒப்புதல் அளித்து அடுத்த நிதிநிலை அறிக்கையிலாவது நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மதுரையை சேர்ந்தவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் மதுரை மெட்ரோவுக்கு கூடுதல் பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம். அது நிச்சயமாக நிறைவேறும் என்று நம்புகிறோம்.
மேலும் விமான நிலையம், ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தமிழ் தெரியாத யாரையும் நியமிக்கக் கூடாது. இந்தி பேசும் நபர்களை மட்டும் பணியில் அமர்த்துவது கட்டணம் வசூலிக்கும் தந்திரம் என்றார் வெங்கடேசன்.