தமிழகத்தில் அடுத்த வாரம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, திருச்சி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் மழையும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையும் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் ஆகஸ்ட் 26 முதல் 29ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மேலும், ஆகஸ்ட் 30ம் தேதியும் இதே போன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இதில், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24 முதல் 26 வரை மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இத்தகைய சூறாவளி காற்று வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.