சென்னை: சென்னை மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் சேவை சீராக உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது பச்சை மற்றும் நீலம் ஆகிய இரு வழித்தடங்களில் 54 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் விம்கோ நகர் பணிமனையில் இருந்து விமான நிலையம் வரை நீலம் பாதையிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை பசுமை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனிலும், கவுன்டர்கள் மூலமாகவும் டிக்கெட் வாங்கி பயணிகள் பயணம் செய்கின்றனர்.
சென்னையில் இன்று காலை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவித்தனர். இதனால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சர்வர் செயலிழந்ததால், டிக்கெட் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. பயணிகள் மெட்ரோ ரயில் நிலைய கவுன்டர்களில் டிக்கெட் வாங்குமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் சேவை வழக்கம் போல் உள்ளது. சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் டிராவல் கார்டுகள், மொபைல் க்யூஆர் மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.