மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 71வது முறையாக 100 அடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து கபினி, கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணைக்கு நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 81,552 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூலை 27) காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 93,828 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, காலை 9 மணியளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியை நெருங்கியது. நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக இருந்தது. இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் 16 கண் மதகுகளை தண்ணீர் தொட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதையடுத்து, காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 16 கண்மாய் அணைக்கட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் காவிரி ஆற்றுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். மேட்டூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சதீஷ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் வினாடிக்கு ஆயிரம் கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் 120 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இது 93 டி.எம்.சி. ஆனால், தற்போது அணையில் 64 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. அதன்பின், 405 நாட்களுக்கு பின், இன்று 100 அடியை எட்டியது. அணை வரலாற்றில் 71வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த 2005-2006ம் ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 428 நாட்கள் தொடர்ந்து 100 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.