சென்னை: நேற்று, எரிசக்தி துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்துவது குறித்து, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடந்தது.
சென்னையில் உள்ள மின் வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில் முடிக்க வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதுவரை அறிவிக்கப்பட்ட 108 அறிவிப்புகளில், 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்குதல், 3 புதிய மின் பகிர்மான மண்டலங்கள் அமைத்தல், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், கரூர் தாந்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண ரத வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகளை மாற்றுதல் உள்ளிட்ட 28 முக்கிய அறிவிப்புகள் வெங்கடரமண ஸ்வாமி மற்றும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 78 அறிவிப்புகளுக்கான பணிகள் பல்வேறு கட்டங்களில் வேகமாக நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர, தேவையான தளவாடங்கள் மற்றும் மின்சாதனங்கள் வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஜூலை 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவற்றில், சேதமடைந்த 31,328 மின்கம்பங்கள் இன்றைய நிலவரப்படி மாற்றப்பட்டுள்ளன. சாய்ந்திருந்த 24,943 மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 1.53 லட்சம் இடங்களில் பலவீனமான இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டுள்ளன.
சுமார் 1,259 கி.மீ. தூர கேபிள்கள் புதியதாக மாற்றப்பட்டுள்ளன. மொத்தம் 88 பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பராமரிப்புப் பணிகளை ஒரு மாதத்துக்குள் விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, பசுமை எரிசக்தி கழக நிர்வாக இயக்குனர் அனிஷ் சேகர், இணை நிர்வாக இயக்குனர் (நிதி) விஷு மகாஜன், கு.இந்திராணி (இயக்குநர், விநியோகம்), அனைத்து இயக்குனர்கள், தலைமை பொறியாளர்கள் பங்கேற்றனர்.