அமைச்சர் பொன்முடி சைவம் மற்றும் வைணவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கடந்த சில நாட்களாகவே அரசியல் மற்றும் சமூக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த பேச்சு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்ய, பதிவுத்துறைக்கு ஐகோர்ட் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் பொன்முடியின் பேச்சு பெண்களை மட்டுமன்றி சைவம், வைணவம் எனும் மதங்களை இழிவாக பேசும் வகையிலும், வெறுப்பை தூண்டும் வண்ணத்திலும் உள்ளதாகக் கடுமையாக விமர்சித்தார். வெறுப்பு பேச்சை சகிக்க முடியாது என்றும், தமிழக போலீசார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டமானது என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர் பொன்முடி, புனிதமான பட்டை நாமத்தை விலை மாது சேவையுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இது மத உணர்வுகளை மட்டுமன்றி சமூக ஒற்றுமையையும் பாதிக்கும் வகையில் இருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த பேச்சு ஆபாசமாகவும், இரண்டு முக்கிய சமயத்தைச் சேர்ந்த மக்களையும் புண்படுத்தும் விதமாகவும் உள்ளது என அவர் கூறினார்.
இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவு வழங்கியதன் பின்னணியில், அரசியல் வட்டாரத்திலும், சட்டத் துறையிலும் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.