கோவை: கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (அக்டோபர் 15) ஆய்வு செய்தார். கோவையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இது தவிர தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை கோவையில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள கதிரவன் கார்டன் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்குள்ள அதிகாரிகளிடம் மழை பாதிப்புகள் குறித்தும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மாநகராட்சி சார்பில் அதே பகுதியில் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சாலைகளில் மாநகராட்சி ஊழியர்களின் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு, பணிகளை உடனடியாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் நகரின் பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, எம்பி கணபதி ராஜ்குமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்டச் செயலர்கள் என்.ஏ.கார்த்திக், டி.எச்.ஏ.ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.