சென்னை: தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க அனைத்து தலைமை மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கம் தன்ராசு தலைமையில் அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலி காட்சி கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: இன்று (நேற்று) காலை நிலவரப்படி கொடைக்கானல், ஊட்டி பகுதிகளில் கனமழை பெய்தாலும் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்பான நிலையான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கனமழையால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டாலும், அதை உடனடியாக சரி செய்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், செல்போன் டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை கனமழையால் பாதிக்கப்பட்ட 230 உயர் அழுத்த மின்கம்பங்களில் 200 மின்கம்பங்களும், 466 குறைந்த மின்னழுத்த மின்கம்பங்களில் 302 மின்கம்பங்களும், 25 மின் மாற்றிகளில் 16 மின் மாற்றிகளும் சரி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 மின்மாற்றிகளுக்கு நிலையான மின்சாரம் வழங்கப்படுகிறது.
பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உட்பட 250 பேர் கொண்ட குழு தற்போது போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கள சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பராமரிப்பு பணிகள் இம்மாதம் 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன்படி பழுதடைந்த 8,813 மின்கம்பங்கள் புதியதாக மாற்றப்பட்டுள்ளன. இவை தவிர சுமார் 182 கி.மீ. பழைய கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில், மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிர்வாக இயக்குனர் அனிஷ்சேகர், இணை நிர்வாக இயக்குனர் (நிதி) விசு மகாஜன், பகிர்மான இயக்குனர் கே.இந்திராணி, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள், மின் பகிர்மான மாவட்ட மேற்பார்வை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.