புதுடெல்லி: லோக்சபாவில் நேற்று பூஜ்ய நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ”வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசு வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கவில்லை என்ற கருத்தை ஏற்கிறோம். இருப்பினும், இந்த பிரச்சினையில் விரிவான விவாதம் அவசியம். ஒரே எண்ணில் பல வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுவது குறித்து நாடு முழுவதும் கேள்விகள் எழுந்துள்ளன.
மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் பேசுகின்றன. மூத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கூறுகையில், “வாக்காளர் பட்டியலில் தவறு இருப்பது மாதிரி நடத்தை விதியின் 20-வது பிரிவை மீறுவதாகும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மோசடி நடந்து வருகிறது. இதற்கு முன் இப்படி நடந்ததில்லை.

மேற்கு வங்கத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை எப்படி அதிகரித்தது? குஜராத் மற்றும் ஹரியானாவில் இருந்து வாக்காளர்கள் வந்திருக்கிறார்களா? இதை பொறுத்துக்கொள்ள முடியாது. தேர்தல் ஆணையம் எப்போதுமே தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு காரணமான தேர்தல் கமிஷன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் கூறுகையில், “வாக்காளர் பட்டியலில் ஒரே அடையாள அட்டை எண்ணுடன் பல வாக்காளர்கள் இருப்பது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து எங்களது கவலைகளை தெரிவித்துள்ளோம். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை முழுமையாக மறுஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். இது மிகப்பெரிய குறைபாடு,” என்றார்.