மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் கட்டப்பட உள்ள இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அரிட்டாபட்டி பகுதியில் 5,000 ஏக்கரில் கரும்பு, நெல் போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த இடத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மிகவும் தவறானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை குழி தோண்டும் செயல்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சிகள் என்ற பாகுபாடின்றி, மத்திய அரசு வழங்கிய உரிமைகளை ரத்து செய்ய, சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை மத்திய அரசு செவிமடுத்து ரத்து செய்ய வேண்டும்.
இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்தப்படும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசைப் பொறுத்த வரையில் வேதாந்தா, அம்பானி, அதானி போன்றோர் வாழ வேண்டும் என்று நினைக்கும், சாமானியர்களைப் பற்றி கவலைப்படாத மோசமான அரசு.
மத்திய அரசிடம் பேசாமல் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் விளையாட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.