தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு காணப்படுகின்றது. தமிழக அரசு மற்றும் ஆளும் திமுக கட்சி இதை மறுப்பதாக தொடர்ந்து அறிவித்து வருகிறது. குறிப்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின், தேசிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இந்த திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுகளை அழுத்தம் கொடுக்கிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக்கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழக அரசு ரூ.5,000 கோடி நிதியை இழக்கும் என அறிவித்தார். இதற்கு பதிலளித்த தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று உறுதி கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து, தமிழகத்திற்கே உரிய தனித்தன்மை கொண்ட கல்வி முறையை பாதுகாக்க மத்திய அரசின் அழுத்தங்களை எதிர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2,152 கோடி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில்தான் கர்நாடகாவில் தேசிய கல்விக்கொள்கை ஏற்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு காணப்படுவது கன்னட மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கன்னட சமூக வலைதள பயனர்கள், தமிழ் மக்களின் கல்விக்கான போராட்டத்தை பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களும் தங்களுக்கே உரிய கல்வி முறையை கடைப்பிடிக்க மத்திய அரசின் கட்டாயத்துக்கு ஆளாகக்கூடாது என சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தை காக்க மாநிலங்களுக்கு உரிய உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த விவகாரம் இந்தியா முழுவதும் அரசியல் மற்றும் கல்வி ரீதியாக விவாதிக்கப்படும் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதி ஒதுக்கப்படும் என்பது தவறான நிலைப்பாடு என்று தமிழக அரசும் பல கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.