சேலம்: “தீர்மானங்களை மட்டும் போட்டால் போதாது, மத்திய அரசுடன் ஒத்துழைப்பு மற்றும் நல்லுறவு இருந்தால்தான் ஒரு மாநிலத்தின் ஆட்சி பயனளிக்க முடியும்,” என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், தற்போதைய அரசின் செயல்களை விமர்சித்தார்.

தொடர்ந்து பேசும் அவர், “பொதுமக்கள் எதிர்ப்பை மறைக்க தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன. உதாரணமாக, நீட் தேர்வை எந்த அரசும் ரத்து செய்ய முடியாது. ஆனாலும் அதற்கான தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்படுகின்றது. இதுபோல் கச்சத்தீவு விவகாரமும் பிரதமரின் முடிவினால்தான் முடிவுக்கு வரும். ஆனால் இவை எல்லாம் உண்மையை மறைக்கும் நாடகங்களாகவே இருக்கின்றன,” எனக் குற்றம்சாட்டினார்.
நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து வெற்றி பெறும் எழுச்சி காணப்படுகிறது என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலில் கடுமையாக உழைப்பது அவசியம் என்றும், சமூக வலைத்தளங்களில் பாஜக தலைமையின் வழிகாட்டுதல்படி செயல்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “தவறான மீம்கள், பதிவுகள் போடப்படுமானால், திமுக கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சமூக வலைத்தளங்களில் செயல்படுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நம் கூட்டணி உறுதியான ஒன்று. இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரவே மலரும்.”
திமுக தலைமையிலான கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணியாகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை நியாயமான, ஊழலற்ற அரசியலாகவும் விவரித்த நயினார் நாகேந்திரன், இந்திய அளவில் உருவாகும் புதிய அரசியல் சூழ்நிலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.
தொடர்ந்து, தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான முடிவுகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து எடுப்பார்கள் என்றார். தனது அதிகாரம் கட்சி தொண்டர்களை பாதுகாப்பது மட்டுமே என்றும், தலைமை எடுக்கும் முடிவுகளை ஒழுங்குக்கேற்ப ஏற்றுக்கொள்வது கட்சி பண்பாடு என்றும் கூறினார்.
“பூத் அளவிலான பணிகளை தொடங்கினாலே வெற்றி நிச்சயம்,” என்ற உறுதியுடன் தனது உரையை முடித்தார்.