சென்னை: சென்னை மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய்களில் பொதுமக்கள் பொறுப்பின்றி வீசும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி வலைகள் அமைத்து வருகிறது.
சென்னை மாநகரப் பகுதிகளில் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட 31 கால்வாய்கள் உள்ளன. இதில் 14 கால்வாய்கள் மாநகராட்சிக்கு சொந்தமானது.
இருப்பினும் அனைத்து கால்வாய்களிலும் காற்று தாமரை செடிகள், மிதக்கும் கழிவுகளை அகற்றுதல் போன்ற பராமரிப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதில், மக்கள் குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் கொடுங்கையூர் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், கொளத்தூர் தணிகாசலம் கால்வாய், நுங்கம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சமூக பொறுப்பின்றி வீசி வருகின்றனர்.
இவை அடிக்கடி கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாதாரணமாக செல்ல முடியாமல் தடுக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அதை தடுக்க மாநகராட்சி பூச்சி கட்டுப்பாடு துறை தனித்து போராட வேண்டியுள்ளது. குப்பைகளை வீடு வீடாகச் செல்லும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், மக்கள் மனதில் மாற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், கால்வாய்களில் கொட்டப்படும் மிதக்கும் கழிவுகளை தடுத்து நிறுத்தி அகற்றும் வகையில், கால்வாய்களில் வலைகளை மாநகராட்சி அமைத்து வருகிறது. அங்கு குவியும் கழிவுகள் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது.
நீர்நிலைகளில் குப்பை கொட்டுபவர்களை ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்து வருவதாகவும், விதிகளை மீறி குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.