சென்னை: ஆவடி-சென்னை சென்ட்ரல் இடையே புதிய மின்சார ரயில் வரும் 6-ம் தேதி இயக்கப்பட உள்ளது. இது தவிர சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் மெமு ரயிலின் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
புறநகர் மின்சார ரயில் சேவை சென்னையில் ஒரு முக்கியமான பொது போக்குவரத்து வசதி ஆகும். இதில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இந்த ரயில்களின் சேவையை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-
ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் 6-ம் தேதி புதிய மின்சார ரயில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ரயில் நவம்பர் 6-ம் தேதி ஆவடியில் இருந்து மாலை 6.10 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் மாலை 6.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். சென்னை கடற்கரைக்கும் திருவண்ணாமலைக்கும் இடையே 9 பெட்டிகள் கொண்ட மெமு ரயில் இரு வழிகளிலும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் 12 பெட்டிகளாக அதிகரிக்கப்பட உள்ளது. இரு திசைகளிலும் 12 பெட்டிகளுடன் இந்த ரயில் வரும் 6-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே அரக்கோணம் வழியாக மெமு ரயில் இயக்கப்படுகிறது. பதிலுக்கு இந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரைக்கு இயக்கப்படுகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கடற்கரையை வந்தடையும் மெமு ரயில் தாம்பரம் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த நீட்டிப்பு வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.