
சென்னை: தமிழக அரசு சார்பில், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்ககங்கள் மூலமாகவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் உள்ள வாழ்வோம் திட்டம் மூலமாகவும் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பால் மையங்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சி, மாதவிடாய் சுகாதார மேலாண்மை மன்றங்கள், அறிவு மையங்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சி, சமூக பண்ணை பள்ளிகள் மற்றும் சமூக திறன் பள்ளிகள் ஆகியவை இதில் அடங்கும்.
இதேபோல், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள், நகர்ப்புற இளைஞர்களுக்கு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் தீன் தயாள் உபாத்யாயா ஊரக திறன் பயிற்சி திட்டம், வேலைவாய்ப்பு முகாம்கள், இளைஞர் திறன் விழாக்கள் போன்றவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம், பெண்கள் வாழ்வாதாரம் தொடர்பான வாய்ப்புகள், நலத்திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்த வழிகாட்டுதல்கள் பெறவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் மற்றும் புகார்கள் தெரிவிக்கவும் வாழ்வாதார உதவி அழைப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 155330 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.