மதுரை: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த கோபிநாத், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அரவக்குறிச்சி குறிக்காரன் வலசை, கிழ்ப்பாக்கம் கிராமம் மற்றும் சுற்றுவட்டார ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிராம மக்கள், வடமாநிலத்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வேலை செய்ததாகக் கூறி ஏமாற்றி ரூ.5 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. குழாய் இணைப்புக்கு ரூ.1,200 கட்டணமாக மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்துள்ளார்.
ஆனால், இங்கு ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுகின்றன.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கெளரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை முறையாகக் கண்காணிப்பது இல்லை.
இத்தகைய திட்டங்களில் அவர்கள் ஊழலை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த மனுவுக்கு மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.