சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அந்த மாவட்டங்களில் அமைந்துள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் துரிதமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகள் திருவள்ளூர் மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலும் உள்ளன.
எனவே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்தை கடுமையாக கண்காணிக்க, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது உடனடியாக தலைமை செயலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி. நேற்றைய நிலவரப்படி ஏரிகளில் 3,882 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் நீர் இருப்பு 9,064 மில்லியன் கன அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.