சென்னை: அதிகாரிகள் பறிமுதல்… சென்னை விமான நிலையத்தில் பயணி பெல்ட்டில் பதுக்கி கடத்தி வந்த ரூ.1.57 கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் சுற்றுலா பயணியாக குவைத் சென்றுவிட்டு திரும்பி வந்த ஷேக் மகபூப் பீர் (வயது 36) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர்.
அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. இதனால் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அவரது இடுப்பில் துணி பெல்ட் அணிந்து இருந்தார். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இருந்ததால் சந்தேகத்தின்பேரில் அந்த பெல்டை பிரித்து பார்த்தனர்.
அதில் பெல்ட்டுக்குள் 3 பைகள் இருந்தன. அதற்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ,1 கோடியே 57 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஷேக் மகபூப் பீரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.