மீனம்பாக்கம்: தமிழகத்தின் புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 51 மீனவர்கள் கடந்த 25-ம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அங்கு, தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு சுற்றி வளைத்தது. மேலும், தமிழக மீனவர்கள் 51 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்தனர்.
அவர்களது படகுகள், மீன்கள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் தமிழக மீனவர்கள் 51 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேரை விடுதலை செய்யக்கோரி பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம் எழுதினார்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்து இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தது.
விடுதலை செய்யப்பட்ட 51 தமிழக மீனவர்களுக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் அனைத்து மீனவர்களுக்கும் அவசர சான்றிதழ் வழங்கினர். மேலும், 51 தமிழக மீனவர்களுக்கு விமான டிக்கெட்டுக்கான ஏற்பாடுகளை இந்திய தூதரக அதிகாரிகள் செய்தனர்.
இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 51 மீனவர்கள் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கினர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் ஏற்றி பத்திரமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.