புதுச்சேரி: கடற்றொழில் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டலத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.
இது மேலும் வலுப்பெற்று, அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 17.12.2024 முதல் 19.12.2024 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளி வீச வாய்ப்புள்ளது.
புதுச்சேரியில் உள்ள மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், மற்றவர்கள் புதுச்சேரி கடற்பரப்பில் பாதுகாப்பாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிடும் அறிவிப்பின்படி இந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்படும் என்பதால், வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.