தஞ்சாவூர்: இணையவழி மனு தாக்கல் முறையை ரத்து செய்ய கோரி தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள அஞ்சலகத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்கத்தினர் இன்று பதிவு அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலுள்ள நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணையவழியில் தாக்கல் செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். வழக்குரைஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள அஞ்சலகம் மூலம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு வழக்குரைஞர் சங்கத் தலைவர் திராவிடசெல்வன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் அருண்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர்கள் கோ. அன்பரசன், எம். பாலையன், வெ. ஜீவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர்கள் சந்திரமோகன், சித்தார்த்தன், கஜேந்திரன், உமர்முக்தார், சாரதா, கண்ணகி, இந்திரா, பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.