சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.
நெடுந்தீவு அருகே கடந்த 10-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்களை கவலையடையச் செய்வதாகவும், பெரும் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மீனவர்கள் மீதான தொடர் கைதுகள் மற்றும் வன்முறைகளுக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.