சென்னை: இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன் நேற்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் மற்றும் சராசரி மதிப்பெண்களை அதிகரிக்க தேவையான செயல் திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம். இதற்கான வழிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதில் 2023-24 பொதுத் தேர்வுகளுடன் ஒப்பிடும்போது மாநில, மாவட்டம் மற்றும் பள்ளி வாரியான செயல்திறன், தகவல்கள் அடங்கும். எந்தெந்த பள்ளிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகள் குறித்து ஆராய்ச்சி நடத்துவதற்கும் இந்த அறிக்கை உதவியாக இருக்கும். இதைத் தொடர்ந்து, தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம், தேர்ச்சி சதவீதம் மற்றும் சராசரி மதிப்பெண்களை அதிகரிக்க செயல் திட்டங்களை வகுக்க முடியும்.

இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு மறுஆய்வுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியரையும் இதில் பங்கேற்க அழைக்கலாம். இந்தக் கூட்டத்திற்கு முன், மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான தேர்ச்சி அறிக்கைகளை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குவது அவசியம். பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க என்ன செயல் திட்டங்கள் உள்ளன என்பதை தலைமை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கக் கல்வி அதிகாரிகள் கண்டறிந்து அவற்றை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.