சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2019-ல் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, வார்டு மறுவரையறை முடிந்து, 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் பஞ்சாயத்து அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.
மீதமுள்ள 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026-ல் முடிவடைகிறது. 2026-ல் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் வரவுள்ளதால் உள்ளாட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்தி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. முன்னதாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி வேட்பாளர் பட்டியலை கோரினார்.
இந்நிலையில், தற்போது, வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை தவிர அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் செயலர் எழுதியுள்ள கடிதத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான அனைத்து வகையான ஓட்டு சாமான்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். எனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்குப்பெட்டிகளின் தற்போதைய தரம், நிலை ஆகியவற்றை கையிருப்பில் உள்ள இடங்களில் ஆய்வு செய்து சிறிது பழுதடைந்தவற்றை தரம் பிரித்து வாக்குப்பதிவுக்கு பயன்படுத்த வேண்டும்.
சிறிய பழுதுகளுக்கு ஒரு பெட்டிக்கு ரூ.21 செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, அவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.