திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை 60 ஆண்டுகளாக அமல்படுத்தி வருகிறோம். 2020-ல் புதிய கல்விக் கொள்கையை அறிவித்தார்கள்.5 ஆண்டுகள் கழித்து மும்மொழிக் கொள்கையை திணிப்பது எப்படி நியாயம்? கடந்த 4 ஆண்டுகளாக மும்மொழி திட்டம் செயல்படுத்தப்படாததால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை தரமாட்டோம் என அரசியல் காரணங்களுக்காக கூறுகின்றனர்.
வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். மக்களை சந்தித்துள்ளேன். அவர்களுக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும். இரண்டாவது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால், வட மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை செயல்படவில்லை. தமிழகத்தில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அவை மத்திய அரசால் நடத்தப்படுகின்றன. 52 பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படவில்லை. எந்த முகத்துடன் தமிழக அரசிடம் வந்து நீங்கள் மும்மொழி திட்டத்தை செயல்படுத்தவில்லை என்று கூறுகிறார்கள்.
அதனால் தான் நிதி வழங்கவில்லை. தமிழகத்தில் இந்த பிரச்னையில் பா.ஜ.க தவிர அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நிற்கின்றன. இப்பிரச்னையில் தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.