சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் 300 முதல் 500 நோயாளிகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் நேற்று இரவு 8.30 மணியளவில் மின்சாரம் செல்லும் கேபிள்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- இரண்டு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. வென்டிலேட்டர் சிகிச்சை பெறும் 15 நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேபிள் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் பயப்பட வேண்டியதில்லை. மின் கசிவால், தீ விபத்து ஏற்பட்டு, மின் வினியோகம் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அனைத்து வார்டுகளையும் பார்வையிட்டோம். ஒரு மணி நேரத்தில் மின் தடை சரி செய்யப்படும். தீவிர சிகிச்சை பிரிவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, 2 மணி நேரத்திற்கு பின், மின் வினியோகம் சீரானது.