தஞ்சாவூர்:: ஊக்கத்தொகையை உயர்த்தக் கோரி தஞ்சாவூர் மாவட்டச் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் முன் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களைத் தேடி மருத்துவத் திட்ட ஊழியர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ. 5 ஆயிரத்து 500}லிருந்து ரூ. 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எப். திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சி கொடுத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க மாநிலப் பொருளாளர் பி. சாய் சித்ரா தலைமை வகித்தார். போராட்டத்தை சிஐடியூ மாவட்டச் செயலர் எம். கண்ணன் தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலத் துணைத் தலைவர் சி. ஜெயபால் பேசினார். சிஐடியூ மாவட்டத் துணைச் செயலர் கே. அன்பு, ஆட்டோ சங்க கௌரவத் தலைவர் செந்தில்குமார், சங்கத்தின் மாவட்டத் தலைவர் வள்ளி, பொருளாளர் இலக்கியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.