சென்னை: வெளியில் தங்கியிருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வழக்கம் போல் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து 4,900 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால், சொகுசு வசதிகள் இருப்பதால் சிலர் தனியார் பஸ்களையே தேர்வு செய்கின்றனர். குறிப்பாக விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான இருக்கை, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் முன்பதிவு முடிந்துள்ளதால், நீண்ட தூரம் செல்ல வேண்டிய மக்கள் வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யத் தயாராகி வருகின்றனர்.
இதை பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து, பயணிகள் சிலர் கூறியதாவது:- தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல, முன் கூட்டியே திட்டமிடுபவர்களுக்கு, எந்த பிரச்னையும் இல்லை. எக்ஸ்பிரஸ் பஸ்களில் ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டாலும் இருக்கைகள் கிடைப்பதில்லை.
தற்போது ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்படும் பேருந்துகளின் இருக்கை முன்பதிவு முடிந்துவிட்டது. இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி குறைந்தபட்சமாக ரூ.1,795 வசூலிக்கப்படுகிறது. இது இருக்கையுடன் கூடிய பஸ் கட்டணம். படுக்கைக்கு ரூ.2,200 வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.3,300 வசூலிக்கப்படுகிறது. இதுவே நாகர்கோவில் செல்ல அதிகபட்சமாக ரூ.4,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், ”ஆம்னி பஸ்கள் ஒப்பந்த வகை வாகனங்கள் என்பதால், கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை. உரிமையாளர்கள் சார்பில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் கட்டணம் வசூலிப்பதில்லை.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், “ஆம்னி பஸ்களை தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கை விடுத்து வருகிறோம். பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த புகார்களுக்கு, 1800 425 6151, 044 2474 9002, 044 2628 0445, 044 26128 16128 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.