ஜூலை மாதத்தில் மழையில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், விளைச்சல் குறைந்து, காய்கறிகள் விலை அதிகரித்துள்ளதாக கோவை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள தியாகி குமரன் மார்க்கெட்டிற்கு தொண்டாமுத்தூர், காரமடை, அன்னூர், மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளிலிருந்தும், கொடைக்கானல், உதகை போன்ற வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் தியாகி குமரன் மார்க்கெட் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக காணப்படும். இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும், மலையின் தாக்கம் காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது.
இதனால் கோவைக்கு பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக காய்கறிகள் விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தியாகி குமரன் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. க்கும், உருளைக்கிழங்கு ரூ.50 க்கும், சின்ன வெங்காயம் ரூ.30முதல்40 க்கும், பெரிய வெங்காயம் ரூ. 40 முதல் 50 ககும், கத்தரிக்காய் ரூ.60 க்கும், முட்டைகோஸ் ரூ. 40 க்கும், பீட்ரூட் ரூ.60 முதல் 80 க்கும், கேரட் ரூ. 60 முதல் 80 க்கும் விற்பனையாகி வருகிறது.
இது குறித்து காய்கறி வியாபாரி சதாம் என்பவர் கூறுகையில், விளைச்சல் குறைவு காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளதால், காய்கறி வாங்கவே மக்கள் தயங்கி வருகின்றனர். ஒரு கிலோ காய்கறி வாங்குபவர்கள், விலை உயர்வு காரணமாக, அரை கிலோ மட்டுமே வாங்கி செல்கின்றனர். வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் காய்கறி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. உள்ளுர் பகுதிகளிலிருந்தும் காய்கறி வரத்து பாதியாக குறைந்துவிட்டது. தற் போது விற்பனை மந்தமாக உள்ளது” என்றார்.