ஏற்காடு: ஏற்காட்டில் உள்ள படகு இல்ல ஏரி, கழிவுநீர் கலப்பதால் மாசடைந்து வருகிறது. இதனை சீரமைத்து மீட்டெடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஏற்காட்டின் மையத்தில் ஒரு அழகிய ஏரி அமைந்துள்ளது. அதைச் சுற்றியுள்ள தோட்டமும், எல்லாப் பக்கங்களிலும் உள்ள உயரமான மலைகளும் ஏரிக்கு வசீகரமான தோற்றத்தைக் கொடுக்கின்றன. ஏரியில் சவாரி செய்ய மோட்டார் படகுகள் மற்றும் மிதி படகுகள் குறைந்த விலையில் கிடைக்கும்.
மேலும், சுற்றுலா பயணிகள் சொந்தமாக படகு சவாரி செய்யும் வசதியும் உள்ளது. ஏரியின் கரையில், சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் ஏரி பூங்கா உள்ளது. குழந்தைகள் சுதந்திரமாக விளையாடலாம் மற்றும் அருகிலுள்ள ஊஞ்சல்களைப் பயன்படுத்தலாம். சீசன் மற்றும் கோடை காலங்களில், இயற்கை அழகை ரசிக்க கர்நாடகா, ஆந்திரா, கேரளா என இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காடுக்கு வருகை தருகின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடு ஏரி தற்போது முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஏற்காடு மலைப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புகளின் கழிவுநீர் நேரடியாக கலப்பதால், துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த ஏரியில் படகு சவாரி செய்யாமல் திரும்புவதில்லை.
ஏற்காட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த இந்த ஏரி, சுற்றியுள்ள தனியார் ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் நேரடியாக கலக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் இந்த அவலத்தால் சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் தற்போது 75 சதவீதம் ஆகாய தாமரை மற்றும் செடி கொடிகள் படர்ந்து காணப்படுகிறது.
இந்த ஏரியின் மூலம் ஏற்காட்டில் வசிக்கும் மக்களுக்கு அருகில் உள்ள கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது ஏரி மாசடைந்துள்ளதால், கழிவுநீர் கலந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, தமிழக அரசு இப்பிரச்னையில் சிறப்பு கவனம் செலுத்தி, ஏரியை சுத்தப்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.