சென்னை: வீட்டு வசதி முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு, திமுக ஆட்சியில், சென்னை திருவான்மியூரில், அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேத்தின் மனைவி, பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு, விருப்புரிமை ஒதுக்கீடு திட்டத்தின் கீழ், தமிழக அரசு, வீட்டு மனைகளை ஒதுக்கியது.
இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத் துறை, அப்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் முருகையா, ஜாபர் சேட், அவரது மனைவி பர்வீன், டி.உதயகுமார், ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம், ஆகியோர் மீது 2013-ல் வழக்குப் பதிவு செய்தது. இவரது மகன் துர்கா சங்கர். இதில் அமைச்சர் பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் பெரியசாமி மீதான வழக்கு மட்டும் விசாரணையில் உள்ளது. இதை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் கூறியதாவது:-
அமைச்சர் பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர் அமைச்சராக இருப்பதால், கவர்னர் தான் வழக்கு தொடர அனுமதி வழங்க முடியும், சட்டசபை சபாநாயகர் அனுமதி வழங்கியது தவறு. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். அமைச்சர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, “எதிர்தரப்பைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்று கூறிய நீதிபதி, இந்த மனுவுக்கு டிசம்பர் 19-ம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.