திண்டுக்கலில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, புதிய பேருந்து சேவைகள் மற்றும் வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து மலைப்பகுதிக்கான 9 புறநகர் பேருந்துகள், 2 நகர்ப்புற பேருந்துகளை அவர் துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்த 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சிறுமலையில் பட்டா தேவைக்காக வனத்துறையுடன் பேச்சுவார்த்தை நடக்கின்றது என்றும், மலைப்பகுதிகளுக்கு வனத்துறை அனுமதி கிடைத்தால் நெடுஞ்சாலைத் துறை நிதியுடன் சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். நத்தம் தொகுதி புறக்கணிக்கப்படவில்லை என்றும், அனைத்து தொகுதிகளுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார். எந்த இடங்களில் பேருந்துகள் தேவையோ, பட்டியல் வழங்கப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு இல்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த ஐ. பெரியசாமி, தமிழ்நாடு இன்று இந்தியாவின் அமைதி பூங்காவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். வேறு எந்த மாநிலமும் வாழ்வதற்கு இவ்வளவு தகுதி இல்லை என்றும் கூறினார். தமிழ்நாட்டில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் பாதுகாப்பாக செல்ல முடிகிறது எனவும், காவல்துறை இன்று ஸ்காட்லாந்து போல செயல்படுகிறது என்றும் வலியுறுத்தினார்.
அமைச்சராகிய நானே தவறு செய்தாலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும், சரியான விசாரணையின் பிறகே முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார். காவல்துறை மீது திருமாவளவன் எழுப்பிய குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல என்றும், எவர் மீதும் தவறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு குறித்து முதல்வர் கூறியதையே தமது கட்சியின் நிலைப்பாடாக அமைச்சர் பெரியசாமி உறுதி செய்தார்.