தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லத்தில் இயங்கி வரும் கடைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிரடியாக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக அரசு சுற்றுப்புற சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கேரிபை உட்பட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் படி, வல்லம் வல்லம் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் தலைமையில், இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி, துப்புரவு மேற்பார்யாளர் வெங்கடேசன், பம்பு மெக்கானிக் பிரகதீஸ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வல்லம் கடைவீதி உட்பட பேரூராட்சிக்கு உட்பட பகுதிகளில் இருந்த கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் கூறுகையில், வல்லம் பேரூராட்சியை பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சியாக உருவாக்கி வருகிறோம். அரசு தடையை மீறி பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்துதல், விற்பனை செய்தல் போன்றவற்றில் ஈடுபடும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.