புதுடெல்லி: வகுப்புகளுக்கு வராமல் போலி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத தடை விதிக்கப்படுவதாக சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பல ஆண்டுகளாகப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்குத் தங்களைத் தயார்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதில் சில மாணவர்கள் பிளஸ் 2 பாடங்களில் கவனம் செலுத்தாமல், நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இதுபோன்ற மாணவர்கள் தினமும் வகுப்புகளுக்கு வரவில்லை என்றாலும், சில தனியார் பள்ளிகள் நேரடியாக பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கின்றன. இதுபோன்ற சில போலி பள்ளிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து தேர்வு விதிகளில் சிபிஎஸ்இ பல மாற்றங்களை செய்துள்ளது.

இதுகுறித்து சி.பி.எஸ்.இ. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போர்டின் திடீர் ஆய்வின் போது, பள்ளிக்கு தொடர்ச்சியாக வராத மாணவர்களோ, வகுப்பிற்கு வராத மாணவர்களோ, பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவர் வகுப்புகளுக்கு தவறாமல் வருவதை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோர்களின் பொறுப்பாகும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் குறைந்தது 75 சதவீத வருகைப் பதிவேடு வைத்திருக்க வேண்டும்.
அப்படி வருகைப் பதிவேடு இல்லாத மாணவர்கள் தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனத்தின் (என்ஐஓஎஸ்) கீழ் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதலாம். அவசர மருத்துவக் காரணங்கள், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது உள்ளிட்ட சில காரணங்களுக்காக 25 சதவீத விலக்கு அளிக்க பரிசீலித்து வருகிறோம். இந்த விதிமுறைகள் 2025-26-ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.