திருவாரூர்: திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். அந்த ரவுடி காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி மனோ நிர்மல்ராஜ் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீடாமங்கலம் அருகே வழிப்பறி கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைதான நிலையில், தப்பியோடிய ரவுடி மனோ நிர்மல்ராஜ் என்பவரை ஆதனூரில் போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது ரவுடி நிர்மல்ராஜ், காவலர் ஒருவரின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயற்சி செய்தார். இதையடுத்து தப்ப முயன்ற ரவுடி நிர்மல்ராஜை நீடாமங்கலம் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார், வலது காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.
இந்த நிலையில் காயமடைந்த காவலர் விக்னேஷ் மற்றும் ரவுடி நிர்மல்ராஜ் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.