நாமக்கல: உற்சாகமான பொங்கல் விழா… நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்பது தமிழர்களால், மார்கழி மாதம் கடைசி நாளில் துவங்கி தை மாதம் 3ம் நாள் வரை மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழா தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழர்கள் வசிக்கும், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சூரியனுக்கும், ஆண்டு முழுவதும் உழைக்கும் மாடுகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும், அறுவடைத் திருநாளாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
விவசாயிகள் அதிகம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாத கடைசி நாளான நேற்று போகிப் பண்டிகை நடைபெற்றது. அதையொட்டி பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றம் கழனிகளை சுத்தம் செய்து, காப்புக்கட்டி கொண்டாடினார்கள்.
இன்று தை 1ம் தேதி பொங்கல் பண்டிகை, வீட்டுப் பொங்கலாக கொண்டாடப்பட்டது. ஆடி மாதத்தில் பயிரிட்ட பயிர்கள் நல்ல விளைச்சலைத் தை மாதம் தரும். இதில் அறுவடை செய்த நெல்லின் அரிசியைக் கொண்டு பால், சர்க்கரை, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்துப் புதுப் பானை, புது அடுப்பில் பொங்கல் வைத்தனர்.
பொங்கல் பொங்கும் வேளையில், பொங்கலோ பொங்கல் என்று கூறி சூரியபகவானை வழிபட்டனர். பின்னர் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் வழங்கி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள்.
நாளை 16ம் தேதி மாட்டுப்பொங்கல் உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்கள் தோட்டங்களில், மாடுகள் மற்றும் கால்நடைகளை, குளிப்பாட்டி, பொட்டு வைத்து அழகுபடுத்தி, மாட்டுப் பொங்கல் வைத்து அதை கால்நடைகளுக்கு படைத்து, அவர்களும் சாப்பிடுவது நாளைய மாட்டுப் பொங்கலின் சிறப்பாகும்.