அரசுப் பள்ளிகளில் இனிய கல்வியாண்டில் காலை உணவாக உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் மற்றும் சாம்பார் வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
சட்டசபையில் சமூக நலத்துறை மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர், காலை உணவு திட்டத்தில் புதிய மாற்றத்தை அறிவித்தார். இதுவரை வழங்கப்பட்டு வந்த உப்புமாவுக்கு பதிலாக, மாணவ, மாணவிகளுக்கு சத்தான மற்றும் விருப்பமான உணவாக பொங்கல் வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

அத்துடன், சத்துணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு ஊட்டும் மானிய தொகை ரூ.61 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புதுமைப்பெண் திட்டத்துக்காக இதுவரை ரூ.721 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், சென்னையும் மதுரையும் மையமாக கொண்டு திருநங்கைகளுக்காக ‘அரண்’ என்ற தங்கும் மையங்கள் உருவாக்க ரூ.63 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உப்புமாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில், இப்போது பொங்கல் வழங்கப்பட உள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.