சென்னை: மேட்டூர் உள்ளிட்ட நான்கு அணைகளை மேம்படுத்துவதற்கான அறிக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக நீர்வளத்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
மேட்டூர், வைகை, அமராவதி, பேச்சிப்பாறை ஆகிய 4 அணைகளின் கொள்ளளவை 2020-21-ம் ஆண்டில் நீர்வளத்துறை மேம்படுத்தும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, ஜூலை 26-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில், நான்கு அணைகளை தூர்வாருவதற்கான சட்டப்பூர்வ அனுமதி மற்றும் ஆலோசனைக் கட்டணமாக ₹3.63 கோடி ஒதுக்கப்பட்டது.
அதன்படி, தகுந்த ஆலோசனை நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டு, வைகை மற்றும் அமராவதி அணைகளுக்கான டெண்டர்கள் முறையே 13 மற்றும் 20-ம் தேதிகளில் திறக்கப்படும். மேட்டூர் மற்றும் பேச்சிப்பாறை அணைக்கான ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நீர்வளத்துறையின் பரிசீலனையில் உள்ளது. இந்த டெண்டர்கள் முடிவடைந்ததும், திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, நான்கு அணைகளிலும் தோண்டும் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.